திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த ஐங்குணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 276 மாணவிகள் மற்றும் 180 மாணவர்கள் என மொத்தம் 456 பேர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
இதில் தற்போது பெண்கள் கழிவறை பயன்படுத்த முடியாத அளவிற்கு போதிய வசதிகள் இல்லாத சூழ்நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் ஆனிரீட்டா, தனது சொந்த செலவில் கழிவறை ஏற்படுத்தித் தர நினைத்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியரை அணுகி, அனுமதி பெற்றுள்ளார். இதனையடுத்து பள்ளி வளாகத்தில் ரூ.6.40 லட்சம் செலவில் மாணவிகளுக்கு 8 கழிவறைகளும், ஆசிரியர்களுக்கு 2 கழிவறைகளும் என மொத்தம் 10 கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த கழிவறைக்குத் தேவையான வாளி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார், ஆசிரியர் ஆனிரீட்டா. ஆசிரியரின் இந்தச் செயலுக்கு பெற்றோர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளிக்கு ரூ.4.65 லட்சத்தில் சீர்வரிசை.. அசத்திய ஆச்சனூர் மக்கள்!