திருவண்ணாமலை: சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அனைத்து விதமான போஸ்டர்களையும் நீக்கிய நெடுஞ்சாலை துறை, புதிதாக பெயிண்ட் அடிக்க தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிக்கால் பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும்வரை சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு சுவர்களில் விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சிகளின் வாழ்த்து போஸ்டர்கள், பொதுமக்கள் சுப துக்க நிகழ்ச்சிகள், வணிக நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் என பலர் போஸ்டர்கள் ஓட்டுவது வழக்கம்.
இப்படிப்பட்ட விளம்பர போஸ்டர்களை பார்க்கும் ஆர்வத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும்,பொது மக்களும் நெடுஞ்சாலை துறைக்கு தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தனர்.
புகாரின் பேரில் களத்திலிறங்கிய நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்களை கொண்டு தடுப்பு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து எறிந்துவிட்டு கருப்பு வெள்ளை வண்ணம் கொண்ட பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.மேலும் நிழல் கொடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியிலும் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.