திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கரூரில் இருந்து செய்யாறுக்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்கம் டவுன் பகுதியில் லாரி சென்றபோது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியதால், பீதியடைந்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பின்னர் கிரேன் உதவியோடு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அடிக்கடி இதுபோன்று விபத்து நடைபெறுவதாகவும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.