திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர், வேலுச்சாமி (51). இவர் மண்பாண்டம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் மற்றும் திருமணத்தைத்தாண்டிய உறவு என பல விசயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேலுச்சாமி தனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் பணியில் நேற்று ஈடுபட்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்குச் சென்று வீட்டிற்குத் திரும்பி வந்த, சாந்தி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடப்பதைப் பார்த்து வேலுச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த வேலுச்சாமி மண் வெட்டியால் சாந்தியை தாக்கி உள்ளார். இதைக் கண்ட சாந்தியின் மகனான வேடி மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரும் வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பறித்து, வேலுச்சாமியினையும் அவரது தாயார் நாவம்மா மற்றும் மனைவி சுசிலா ஆகிய மூன்று பேரையும் தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் காயம் அடைந்த நாவம்மா, சுசிலா, சாந்தி ஆகிய மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய வேடி மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.