திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள், டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலருமான தீரஜ்குமார் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீரஜ்குமார், "திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு 747 மில்லிமீட்டர் பெய்திருக்கிறது. சராசரி மழை அளவு 468 மில்லி மீட்டராகும். ஆனால் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்திருக்கிறது.
மேலும் வடகிழக்குப் பருவமழை ஆண்டு சராசரி 446 மில்லி மீட்டராகும். இதுவரை மட்டும் 124 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மழை அதிகரிக்கக்கூடும். மாவட்டம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம்.
அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் இயற்கை பேரிடர்களின்போது உடனடி மீட்புப் பணிக்காக மாவட்டம் முழுவதும் 699 ஆண்கள், 386 பெண்கள் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தாலும் அவற்றை உடனடியாக அகற்ற 288 பேர் மரம் வெட்டும் பணிக்காகத் தயார் நிலையில் உள்ளனர். குடியிருப்புகளில் பாம்புகள் வரும் வாய்ப்பு இருப்பதால் அவற்றைப் பிடிக்க 61 பேர் தயார் நிலையில் உள்ளனர். மழைக்காலங்களில் பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளையும் முறையாகத் திட்டமிட்டிருக்கிறோம்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை 151 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் டெங்குவிற்கு ஒரு உயிரிழப்புகூட நிகழவில்லை. இந்த மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: டெங்கு கொசுக்களைக் கொல்லும் புதிய மெஷின்..!