திருவண்ணாமலை: போளூரை அடுத்த எடைப்பிறை ஊராட்சி மன்ற தலைவராக ஜீவா என்பவர் தற்போது பதவி வகித்து வருகிறார். எடைப்பிறை ஊராட்சியில் கோவிந்தசாமி என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக டேங்க் ஆபரேட்டராக பணி செய்து வந்துள்ளார். டேங்க் ஆப்ரேட்டர் கோவிந்தசாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் இறப்புக்குப் பிறகு அந்த டேங்க் ஆபரேட்டர் பணியை மறைந்த கோவிந்தசாமி மனைவி பராசக்தி என்பவர் கடந்த நான்கு மாதமாக செய்து வந்துள்ளார்.
ஆனால், அவர் செய்த டேங்க் ஆபரேட்டர் பணிக்கு நான்கு மாதமாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி ஜீவா சம்பளம் வழங்காததால், பராசக்தி குடும்பம் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பராசக்தி, ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவின் வீட்டிற்கு சென்று, கணவரை இழந்த சூழ்நிலையில் குடும்பம் மிகவும் கஷ்டமாக உள்ளது என்றும் எனவே, கணவர் பார்த்து வந்த பணியினை தனக்கே வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜீவா, உனக்கு டேங்க் ஆபரேட்டர் வேலை வழங்க வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அது உன்னால் முடியாது, எனவே அந்த வேலையை நான் வேறொரு நபருக்கு வழங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பராசக்தி, நம்முடைய ஊராட்சியில் இரண்டு டேங்க் ஆபரேட்டர்கள் இதற்கு முன் இறந்த பிறகு அந்தப் பணி அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தனக்கும் வழங்க வேண்டும் என்றும் என் குடும்பம் வறுமையில் உள்ளது என்றும் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவியிடம் பராசக்தி கெஞ்சி உள்ளார்.
அதற்கு, ஊராட்சி மன்ற தலைவி ஜீவா அப்படியென்றால் 5 லட்சம் தர வேண்டாம், 50 ஆயிரம் குறைத்து கொண்டு 4 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்க வேண்டும், இல்லையென்றால் வேறு நபருக்கு அந்த பணியை வழங்க நேரிடும் என ஊராட்சி மன்ற தலைவி கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஏமாற்றத்துடன் திரும்பிய பராசக்தி மீண்டும் கடந்த 27-ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவை சந்தித்து கேட்டதற்கு, நீ அடிக்கடி வெறும் கையில் வந்து சந்திக்க வேண்டாம் முதலில் நீங்கள் ஒரு 25 ஆயிரம் ஆவது முன்பணமாக வழங்க வேண்டும் என்றும் அப்போதுதான் நான் வேறு நபருக்கு பணி ஆணை வழங்காமல் என்னால் இருக்க முடியும் என்றும் கராராக சொல்லி அனுப்பிவிட்டதாக தெரிகிறது.
பராசக்தி நிலை குறித்து, திருவண்ணாமலை விஜிலென்ஸ் டிஎஸ்பி அலுவலகத்தை அணுகி புகார் தெரிவித்துள்ளனர். புகார் சம்பந்தமாக டிஎஸ்பி வேல்முருகன் வழக்கு பதிவு செய்து, எடைப்பிறை ஊராட்சி மன்ற தலைவிக்கு லஞ்சமாக ரூபாய் 25 ஆயிரத்தை பராசக்தி மூலம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தின் உள்ளே வழங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து ஊராட்சி மன்ற தலைவி லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்து, கைது செய்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன் மல்லவாடி பகுதியில் மின்சார வாரியத்தில் லஞ்சம் பெற்றபோது, இதே மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்து, பதற்றம் தனிவதற்குள் மீண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்சம் பெற்றது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசு கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணி - உயர்கல்வித்துறையின் புதிய தகவல்