திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனைக்கு செல்ல இயலாதவர்களுக்கு வீட்டிலேயே சென்று இலவச மருத்துவ உதவி மேற்கொள்ளும் புதிய சேவையை, மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தொடங்கிவைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டுவட காயம், கழுத்து எலும்பு முறிவு போன்ற காயங்கள் காரணமாக கை, கால்கள் முற்றிலும் செயலிழந்து நீண்ட நாட்களாக படுக்கையில் இருப்பதால் படுக்கை புண் ஏற்பட்டு முற்றிலும் செயலற்ற நிலையில் பலர் உள்ளனர். இதேபோன்று மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கடுமையான நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் செயலற்ற நிலையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற இயலாத நிலையில் உள்ளனர்.
இதனால் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையிலும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்போது நோயாளிகளும், அவர்களின் உடன் உள்ளவர்களும் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல இயலாதவர்களுக்கு வீட்டிலேயே சென்று இலவச மருத்துவ உதவி அளிப்பதற்கான 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 89251-23450 என்ற கைபேசி எண் மூலமாக மருத்துவ அழைப்பு என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த அமைப்பின் கீழ் உள்ள 18 வட்டார மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்து உதவி கோரும்போது தொடர்புடைய வட்டாரத்தில் பணிபுரியும் நோய்த்தடுப்பு சிகிச்சை பணியாளர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளியின் வீட்டிற்கு நேரில் சென்று தேவைப்படும் மருத்துவ உதவிகள் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.