திருவண்ணாமலை: 39 வார்டுகள் கொண்ட திருவண்ணாமலை நகராட்சி நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த நிர்மலா வேல்மாறன் என்பவர் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு கடம்பராயன் தெருவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
குறிப்பாக 16வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பவர் பதவியில் உள்ளார். இவரது வார்டு பகுதிக்கு உட்பட்ட கடம்பராயன் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு பல வார்டுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. குறிப்பாக நகை கடைகள், அடகு கடைகள், தங்க நகை செய்யும் கடைகள் ஆகியவை அதிகம் உள்ள இந்த தெருவில் பாதுகாப்பு கருதி கவுன்சிலர் சந்திரபிரகாஷ் அவர் தனது சொந்த செலவில் சாலையை மேம்படுத்தியுள்ளார்.
சாலை முழுவதும் ஐந்து இடங்களில் 4 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கண்காணிப்பு கேமராக்கள், கழிவறை வசதி, குடிநீர் டேங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு முதன்மை வார்டு சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிலையில் திமுகவினர் திமுக நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நேற்று திறக்கப்பட்ட சாலையை மீண்டும் இன்று திறந்து வைத்தனர். இந்த செயல் பொது மக்களிடையே நகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதிமுக, திமுக என அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொருவராக திறந்து வைத்த சிமெண்ட் சாலையை நாளை எந்த கட்சிக்காரர்கள் திறந்து வைத்து, சாலையை தாங்கள் திறந்து வைத்தோம் என உரிமை கொண்டாடுவார்கள்? என்ற கேள்வியும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்று திமுக சார்பில் நடைபெற்ற திறப்பு விழாவின் போது 16வது வார்டு அதிமுக கவுன்சிலர் சார்பில் பெயர் பொறித்து வைக்கப்பட்ட நீர்த் தேக்க தொட்டி மறைக்கப்பட்டும், கழிவறைக்கு பூட்டு போட்டதால் அப்பகுதி வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: கந்துவட்டி பிரச்னை: திருவண்ணாமலை ஒருவர் கொலை.. நான்கு பேர் கைது!