திருவண்ணாமலை: நேற்று பெய்த பலத்த மழையால் திருவண்ணாமலை நான்கு மாட வீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடையில் ஓட வேண்டிய கழிவு நீர், சாலையில் ஓடி வெள்ளம் போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது 7ஆம் நாள் மகா ரத தேரோட்டமானது நான்கு மாட வீதியில் வலம் வருவது வழக்கம். தற்போது நான்கு மாட வீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். திருவூடல் தெரு மேடு சந்திப்பில் இருந்து கோபுர வீதி, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் பாதாளச் சாக்கடையில் ஓட வேண்டிய கழிவு நீர், சாலையில் ஓடி வெள்ளம்போல் காட்சியளித்தது. வெளியேறிய அந்த கழிவு நீர் பூத நாராயணப் பெருமாள் கோயில் அருகே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கழிநீரில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது மட்டுமின்றி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் பாதாளச் சாக்கடையை முறையாக அமைத்துவிட்டு பின்னர் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.