திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விண்ணவனூர் பகுதியிலிருந்து பீமானந்தல் வரை சாலை அமைந்துள்ளது.மேலும் பீமானந்தல் பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் விளை பொருள்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும் இந்த சாலை பயன்படுத்தி வந்தனர்.
இந்த பொது சாலையை துண்டித்து, சுமார் 50 மீட்டர் சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து விண்ணவனூர், பீமானந்தல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள விவசாயிகள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆக்கிரிமிப்பு செய்த தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இது குறித்து தகவலறிந்து வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார், காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஓரிருநாள்களில் ஆக்கிரமிப்பு செய்த சாலையை அகற்றி, கிராம மக்களுக்கு தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்க்கப்படும் என உறுதியளித்தார்.
அதன் பிறகு, தமிழ்நாடு விவசாய சங்கத்தினரும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அப்போது பேசிய பொதுமக்கள், ஓரிரு நாள்களில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தராவிட்டால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து சாலையை அமைத்துக் கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.