திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி செவ்வந்தி. இவருக்கு மதுஸ்ரீ (5), தனுஸ்ரீ (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஜெய்சங்கருக்கு சரியாக வேலை கிடைக்காததால் வீட்டிலேயே மது அருந்திவந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் செவ்வந்தி தனது குழந்தைகளுடன் பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். செவ்வந்தியின் தாய் அம்மணி அம்மாள் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழா நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், அறையில் செவ்வந்தி தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அம்மணி அம்மாள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பூஜை அறையில் செவ்வந்தி துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அவரது காலுக்கு அடியில் இருந்த தனது பேத்திகளைத் தூக்கி பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செவ்வந்தி, மதுஸ்ரீ, தனுஸ்ரீ ஆகிய மூன்று பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.