திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் காலை மற்றும் இரவு வேலைகளில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வெள்ளி காமதேனு கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.