திருவண்ணாமலை: கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருக்கார்த்திகை தீப திருவிழாவின் 7 ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெறுகின்றது. இன்று காலை விநாயகர் தேரும், அதன் பின்பு முருகர் தேர் மாடவீதிகளில் உலா வந்து நிலையை அடைந்தது.
மதியம் அண்ணாமலையாரின் மகாரத தேரோட்டம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின்பு அண்ணாமலைக்கு அரோகரா என்று முழக்கமிட்டு அண்ணாமலையார் தேரை வடம் பிடித்து இழுத்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.
திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்தனர். மகாரத தேர் திருவிழாவினையொட்டி பக்தர்களின் பாதுகாப்பிற்க்காக 5000-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வருகின்ற 6 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலையிலன் மீது மகா தீபமும் ஏற்றபட உள்ளது.
இதையும் படிங்க:வனத்துறை நிலத்தை அதிகாரிகள் பினாமிகள் ஆக்கிரமிப்பு? அரசு பதிலளிக்க உத்தரவு!