திருவண்ணாமலை: சென்னை தண்டையார்பேட்டையைச்சேர்ந்த மெக்கானிக் ஞானசேகரன் என்பவர் இன்று அதிகாலை (ஆக.7) தனது மாருதி ஆம்னி காரில் சென்னையில் இருந்து 'செய்யாற்றைவென்றான்' எனும் கிராமத்திற்குச்சென்றபோது, செய்யாறு பேருந்துநிலையம் அருகே லேசான கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், சந்தேகப்பட்டு உடனடியாக காரை நிறுத்தி ஞானசேகரன் குடும்பத்தினர் வேகமாக கீழே இறங்கினர். இந்நிலையில், சற்றும் எதிர்பாராத நிலையில் தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது. பொதுமக்களின் நடமாட்டம் இல்லாத இடத்தில் இவ்வாறு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.
பின், தகவலறிந்து வந்த செய்யாறு தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். தொடர்ந்து, காரின் கேஸ் இணைப்பை தீயணைப்புத்துறையினர் துண்டித்தனர். இதற்குள் அப்பகுதியில் கூடிய பொதுமக்களை அங்கு வந்த சார்பு காவல் ஆய்வாளர் கலைத்தார். இதனால், அப்பகுதியில் கிட்டதட்ட ஒரு மணிநேரம் வரை பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மகளிர் வாகன பேரணி