திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி சோதனைச்சாவடி அருகே ராஜிவ்காந்தி நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக சில அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளுக்கு முன்பு முட்டை மந்திரம் செய்து சில படங்கள் முட்டையில் வரைந்து மஞ்சள், குங்குமம் வைத்து வீடுகளுக்கு முன்பு வீசிவிட்டு சென்றுவிடுவதாகவும், இதனால், ஒரு இளம்பெண் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் மாந்திரீகம் செய்து முட்டையில் படங்கள் வரைந்து குங்குமம், மஞ்சள் வைத்து முட்டையை தக்ஷிணாமூர்த்தி (50) என்பவரின் வீட்டு முன்பு வீசி சென்றுள்ளார்.
இதையடுத்து, தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தில் அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நோய் எதுவும் இல்லாமல் இருந்த அவரது மகள் சுஜாதா (29) உயிரிழந்துவிட்டார்.
இதேபோல், ஜேசிபி ஓட்டுநர் துரைசாமி (34), அவரது மனைவி ரேணுகா (28) ஆகியோருக்கும் அவர்களது வீட்டு முன்பு மாந்திரீகம் செய்யப்பட்ட முட்டை வீசப்பட்டதால் கணவன், மனைவி இருவரும் உடல்நிலை சரியில்லாமல் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தட்சிணாமூர்த்தியின் எதிர் வீட்டில் உள்ள மல்லிகா (45), அவரது கணவன் லோகன் (50) ஆகியோர் வீட்டு முன்பும் மாந்திரீகம் செய்யப்பட்ட முட்டை வீசப்பட்ட நிலையில் அவரது பிள்ளைகள் அவர்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த மாந்திரீக முட்டைதான் அனைத்திற்கும் காரணம். தங்களது வீட்டில் அனைவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மல்லிகா தெரிவித்துள்ளார்" என்றனர்.
பாதிக்கப்பட்ட தக்ஷிணாமூர்த்தி கூறுகையில், "இந்த ஊரிலுள்ள அனைவரது வீட்டிலும் மாந்திரீகம் செய்யப்பட்டுள்ள முட்டைகள் வீசிவரும் அடையாளம் தெரியாத நபர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தோம்.
ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் ஊரில் வாழ்வதா, சாவதா என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் எங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரில் மாந்திரீக முட்டையை வீசிச் செல்லும் அடையாளம் தெரியாத நபர் யார் என்று கண்டுபிடித்தால் மட்டுமே இதற்கான விடை தெரியவரும் என்று தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தலையில் இருமுடிக் கட்டுடன் ஐயப்பனை தரிசித்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான்