நாள் முழுவதும் இரவு பகல் பாராது சாலையில் நின்று பணிபுரியும் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு கோடைகாலத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும், அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நீர், மோர் வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கலந்துகொண்டு போக்குவரத்துக் காவல் துறையினருக்கு நீர், மோர் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து ஒளிரும் சிவப்பு பச்சை விளக்குகள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கண்ணபிரான், திருவள்ளூர் நகர ஆய்வாளர் ரவிக்குமார், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவக்குமார், கோவிந்தராஜ், திருவள்ளூர் நகர உதவி ஆய்வாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.