திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கும்புளி கிராமத்தில், கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அக்கிராம மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். தினமும் 1 கி.மீ தூரம் சென்று குடத்தில் நீர் எடுத்து வருவதுடன், பலர் பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஏடூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கும்புளி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தை சாலையில் தடுப்புகளை போட்டு சிறை பிடித்ததோடு, காலி குடங்களுடன் மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் பொதுமக்களை சமாதானப்படுத்தி விரைவில் அப்பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை விலக்கிக்கொண்டு அரசு பேருந்தை விடுவித்தனர்.
இதையும் படிங்க: பிஏபி பாசனத் திட்ட விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்!