திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக மழையால் சேதமடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று (டிச.6) 2 பிரிவாக ஆய்வு செய்தனர். ஒரு குழுவினர் வட சென்னை, மற்றொரு குழுவினர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.
முதற்கட்டமாக, எண்ணூர் முகத்துவாரத்தில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து கலக்கும் இடத்தையும், பக்கிங்காம் கால்வாய் வழியாக முகத்துவாரத்தில் கலக்கும் இடத்தையும் பார்வையிட்டனர்.
பொதுப்பணித் துறை செயலர் மணிவாசகம், சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆய்வு செய்த பகுதிகள்
அத்திப்பட்டு, புதுநகர் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டனர். நெய்தவாயல் பகுதியில் சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆரணி ஆற்றின் கரை உடைந்து பிரளயம்பாக்கம் கிராமம் தண்ணீரில் மூழ்கியது குறித்து மறுகரையில் இருந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது பிச்சாட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததாக ஆட்சியர் பொன்னையா, மத்திய குழுவினரிடம் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா, ”நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 3840 ஹெக்டரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
அதே போல 571 ஹெக்டரில் பயிரிடப்பட்ட தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.