திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை ஊராட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்படி சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 19 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 19 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், “மாவட்டத்தில் நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பொருத்த மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராம மக்களின் பாதுகாப்பு கருதி ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஒத்துழைப்பு கொடுத்து கண்காணிப்பு கேமராவைப் பொருத்திவருகின்றனர். மேலும் பெற்றோர் தனது குழந்தைகளை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
அவர்கள் கஞ்சா உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களிலிருந்து நல்வழிப்படுத்த விளையாட்டு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே குழந்தைகளை பெற்றோர் படிப்பு, விளையாட்டில் கவனம் செலுத்த அறிவுரை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
செங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் மோகன்குமார், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வெங்கட் எலிசபெத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சாரதி, காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி, ஊத்துக்கோட்டை காவல் நிலைய காவலர்கள், செங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ்?