திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, அதன் எதிரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்புகளை நேரில் ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பொன்னையா பயிற்சி வகுப்புகளை நேரில் ஆய்வு செய்து வாக்குப் பதிவு அலுவலர்களில் மூன்று பிரிவினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அனைத்து தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களும் தவறாமல் கலந்துகொண்டு தேர்தல் விதிமுறைகள் குறித்து கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 23 ஆயிரத்து 523 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, திருவொற்றியூர், மாதவரம், மதுரவாயில், ஆகிய எட்டு தொகுதிகளில் 13 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், திருவள்ளூர், அம்பத்தூர் ஆகிய 2 தொகுதிகளில் மார்ச் 16ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
கரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 4,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலும், கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை ஆகியவை வாக்காளர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களுக்கும் கூடுதலாக இரண்டு பேர் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
காய்ச்ச்ல இருப்பவர்கள் மாலை ஐந்து மணிக்கு மேல் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தோருக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் தபால் ஓட்டுக்கள் போட வசதி செய்துதரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுக தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு பம்பர் பரிசு' - அமைச்சர் எம்.சி. சம்பத் பெருமிதம்