திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8,9ஆம் வகுப்பு மாணவர்களை, மாணவர் காவல் படையில் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் திருவள்ளூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாகவும், இனி கஞ்சா வழக்குகளில் கைதாவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனவும் எச்சரித்தார்.
மேலும் 'ரூட் தல' என்ற பெயரில் சென்னையில் ரகளையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 கல்லூரி மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை எச்சரித்திருப்பதாகவும், அவர்களது பெற்றோருக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.