திருவள்ளூரில் மகளிர் நீதிமன்றம் மற்றும் குடும்பநல நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் தனலட்சுமி, கடந்த சில மாதங்களாக அவரிடம் வரும் வழக்கில் சாட்சியாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரு தலைப்பட்சமாகவும் அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனால் அரசு வழக்கறிஞரை மாற்றக்கோரி கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் அரசு வழக்கறிஞர் தனலட்சுமியை இடமாற்றம் செய்யக்கோரி திடீரென நீதிமன்ற வளாகத்தின் எதிரே உள்ள திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்து திருவள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். வழக்கறிஞர்களின் இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.