திருவள்ளூர்: பாஜகவினர் அச்சத்தின் உச்சியில் உள்ளதாகவும் எதிர்க்கட்சியே இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட நீதிபதியைக் கொண்டு பாஜகவிற்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல்காந்தியின் தகுதி நீக்க ஆணையை மக்களவை செயலர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நகரியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு தொல்.திருமாவளவன் செல்லும் வழியில் அவருக்கு திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னும் இடத்தில் இந்தியாவில் பொருளாதார மோசடிகளை செய்து ஓடிய மோடி எனப் பெயர் கொண்ட நபர்களை 'மோடி' என்ற பெயரைக் கொண்ட நபர்கள் பொருளாதார மோசடிகளை செய்து வருகின்றனர் என நகைச்சுவையாக ராகுல்காந்தி பேசியது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கிலும் அல்லாதது என்றார்.
இதையும் படிங்க: "பாஜகவின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல் தான்" - அண்ணாமலை!
ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட நீதிபதி: இவ்வாறு ராகுல்காந்தி பேசியதை மோடி என பெயர் கொண்ட ஒருவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாஜக விரும்புவது போல் தீர்ப்பு வராது என்ற பட்சத்தில் அந்த நீதிபதி மாற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட ஒரு நீதிபதியை நியமனம் செய்து இந்த 2 ஆண்டு காலம் சிறை தண்டனை பெரும் வகையில் ஒரு நெருக்கடியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அச்சத்தின் உச்சியில் பாஜக: அத்தோடு, வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சியினரே இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜகவினர் செயல்பட்டுள்ள இந்த செயல்பாடுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் பாஜக அச்சத்தின் உச்சியில் இருப்பதாகவும் விமர்சித்தார்.
மக்களவை செயலாளருக்கு கோரிக்கை: மேலும், இவ்வாறு எதிர்க்கட்சியை இல்லாமல் தேர்தலை சந்திக்கும் நோக்கில் ஒரு அற்பமான அரசியலை பாஜக செய்து வருவதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மக்களவை செயலாளர் இந்த பதவி பறிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்வதாக' திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக, ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அவரை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில், தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியை இணைத்து எல்லா திருடர்களுக்கும் பொதுவான குடும்பப் பெயராக மோடி என எப்படி வந்தது? என ராகுல்காந்தி கூறியதே இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடி கருத்து விவகாரம் - பாட்னா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணை - ராகுலை துரத்தும் வழக்குகள்?