திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும்.
இந்த திருத்தலத்திற்கு, அருகிலுள்ள கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்தும், மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இதனால் காணிக்கைத் தொகையும் அதிகம் பெறப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கோயில் காணிக்கைத் தொகையினை எண்ணுவதற்கு இந்து அறநிலையத் துறை ஆணையரிடமிருந்து அனுமதி பெற்று, மலைக்கோயில் தேவர் மண்டபத்தில் இன்று உண்டியல் பணம் எண்ணப்பட்டது.
உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக வரவழைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டர்களும் பக்தர்களும் திருக்கோயில் ஊழியர்கள் முன்னிலையில் பணத்தைக் கணக்கிட்டனர்.
எண்ணி முடித்து கணக்கிடப்பட்ட பின், 58 லட்சத்து 42 ஆயிரத்து 847 ரூபாய் பணமும், 220 கிராம் தங்க நகை மற்றும் 3 ஆயிரத்து 590 கிராம் வெள்ளி உள்ளிட்டவை கடந்த 26 நாட்களில் பெறப்பட்ட மொத்த காணிக்கைத் தொகை என கோயில் நிர்வாகம் கணக்கிட்டு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தூய்மைப்படுத்தும் பணி: தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்