திருவள்ளூர்: பென்னலூர் பேட்டை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் குழந்தைகள் அரசு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பென்னலூர் பேட்டை பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பரமசிவனிடம் தெரிவித்தார்.
அதையடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்ற பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் அப்பகுதி மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறும், அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழந்தைகளுக்கு செய்து வருவதாகவும் கூறினார். மேலும் காலை உணவு, மதிய உணவு என அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படுகிறது.
அதைத் தவிர, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து தன்னைத் தொடர்பு கொண்டால், குழந்தைகளின் படிப்பிற்காக எந்த உதவி வேண்டுமானாலும் யார் காலில் விழுந்தாவது செய்து தருகிறேன் எனப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது அந்த வீடியோ வரைலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் உதவி ஆய்வாளருக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்தார். அதோடு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து இன்று பென்னலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து, பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் அவர்களை நேரில் சந்தித்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து பாலாஜி நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், "விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களில் எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசயங்களில் தன் பங்கு இருக்கும்.
மேலும் உதவி காவல் ஆய்வாளர் பரமசிவனின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இது அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு ஆகும். இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டினார். நானும் நேரில் வந்து பாராட்டுவதாகத் தெரிவித்தேன். அதற்காக தற்போது நேரில் சந்திக்க வந்துள்ளேன்.
இவர் மேலும் இது போன்ற சமூகப் பணிகளை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவரது நேம் பேட்சில் பெயருக்கு அருகில் அவரது இரத்த வகையை குறிப்பிட்டு அணிந்துள்ளார். அது பாராட்டுக்குரிய விசயம் ஆகும். மேலும் அவரது ரத்த வகை கூட அவரது செயலுக்கு உதவியாக உள்ளது. 'Be positive' (B+)" என நடிகர் பாலாஜி நகைச்சுவையாகப் பேசினார்.
இதையும் படிங்க: Kochi Water Metro: நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?