திருவள்ளூர் மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனத் திருட்டு அதிகளவில் நடந்து வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு திருவள்ளூர் அடுத்த அயத்தூர் கிராமத்தைச்சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் பிரகாஷ் என்பவர் திருவள்ளூர் தேரடியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்குச் சென்று திரும்பிய சிறிது நேரத்தில், அவரது இரு சக்கர வாகனம் திருடப்பட்டது.
இதுகுறித்து பிரகாஷ் திருவள்ளூர் நகரம் போலீசாரிடம் கொடுத்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளைக்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து திருவள்ளூரில் வாகன சோதனையில் திருவள்ளூர் நகர ஆய்வாளர் பத்மஸ்ரீபபி ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளித்ததையடுத்து தீவிர விசாரணை செய்தனர்.
அதன்படி இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டது திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தைச்சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் கணபதி என்கிற சிவா (18) என்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவனது கூட்டாளிகளான மெய்யூர் கிராமத்தைச்சேர்ந்த அருள் என்பவரது மகன் தாஸ் (27) மற்றும் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் பகுதியைச்சேர்ந்த மணி என்பவரது மகன் கார்த்திக் (40) ஆகியோரும் இரு சக்கர வாகனத்திருட்டில் ஈடுபடுவது உறுதியானது.
இதனையடுத்து கணபதி என்கிற சிவா, தாஸ் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்த 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:குஜராத்திலிருந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பேருந்து...டம் டம் பாறை பள்ளத்தில் கவிழ்ந்தது