திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆய்வுப் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் துரை சந்திரசேகர் கேட்டறிந்தார்.
இதில் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் தங்கள் பகுதியில் பாதிப்புகளை குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவை உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர் தங்கள் பகுதிகளுக்கு, வரும் கரோனா பாதிப்பு தடுப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.
அதன் பின் துரை சந்திரசேகர் பேசுகையில், 'ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கரோனா தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் வைத்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்' என்று உறுதியளித்தார்.