திருவள்ளூர் மாவட்டத்தில் திருட்டு, பிக் பாக்கெட், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்களில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் அமைதியாக திருந்தி வாழும் நபர்களை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்ற பட்டியலிலிருந்து விடுவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவின்பேரில் நடைபெற்ற இம்முகாமில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய குற்றவாளிப் பட்டியலில் இருந்து கண்காணிக்கப் பட்டவர்களை இக்கூட்டத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்படுவதாகவும், தற்போது பட்டியலில் இருந்து விடுபட்டாலும் காவல் துறையினர் கண்காணித்து வருவதாகவும், இதைத் தொடர்ந்து தாங்கள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் நீங்கள் தொழில் தொடங்க ஆலோசனைகள் அல்லது உதவிகள் தேவைப்பட்டாலும் மாவட்ட காவல் துறை சார்பில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஆகையால் அனைவரும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து அமைதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து குற்ற பின்னணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் தாங்கள் இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.