திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ளது ஈசா ஏரி. இந்த ஏரி சுமார் 12 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும், பள்ளிகளும் குடிநீர் தட்டுப்பாட்டினால் விடுமுறை அளித்தன. குழந்தைகள், பெண்கள், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் குடிநீர் பிரச்னயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையால் திருநின்றவூர் ஈசா ஏரியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி முழுவதும் சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. இதனால், திருநின்றவூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் குடிநீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈசா ஏரியை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், ‘ஈசா ஏரி சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நாளடைவில் ஆக்கிரமிப்பு காரணமாக 900 ஏக்கராக சுருங்கி விட்டது. திருநின்றவூர் ஏரியிலிருந்து உபரி நீர் கால்வாய் ஆவடி முதல் அண்ணா நகர் வரை தொடர்புடையது. அதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வந்தன. ஆனால், தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு, வரலாற்றில் முதல் முறையாக ஈசா ஏரி வறண்டு விட்டது. இதனால் சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விரைந்து ஏரியைத் தூர்வாரி,விவசாயிகள், மீனவர்கள்,பொதுமக்கள் என அனைவரும் பயனடையுமாறு செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தனர்.