திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவிலேயே எந்த ஒரு முதலமைச்சரும் ஊழல் செய்து ஜெயிலுக்கு போனது இல்லை. ஆனால், ஜெயலலிதா சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு சூடு, சொரணை இருந்தால் அவர் மீதான வழக்குக்கு, நீதிமன்றம் சென்று தடை வாங்கி இருக்க கூடாது. எடப்பாடி பழனிசாமி 10 ஆண்டுகள் என்ன செய்திருக்கிறார்? ஜனநாயக முறைப்படி எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தவில்லை.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவிலிருந்து எவரேனும் ஜெயித்து சட்டப்பேரவைக்குள் வந்தாலும், அவர் பிஜேபி உறுப்பினர் போலவே செயல்படுவார். பச்சை துண்டு போட்டு, பச்சை துரோகம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன் சுமை, தற்போது அதிமுக ஆட்சியில் ஆறு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொல்லாத அதிமுக ஆட்சிக்கு, பொள்ளாச்சி விவகாரமே சாட்சி. பொள்ளாச்சியில் ஆளும் கட்சி ஆதரவுடையவர்கள், 200 பெண்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நானும் ஒரு பெண்ணின் தகப்பன், அதனால் அந்த வலி எனக்கு தெரியும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வி உரிமை பறிபோயுள்ளது. தமிழ்நாட்டில் அனிதாவைத் தொடர்ந்து 14 மாணவர்கள் நீட் தேர்வினால் இறந்துள்ளனர். அதிக கோமாளிகள் இருக்கும் ஆட்சி, அதிமுக ஆட்சி. குட்கா விவகாரத்தை யார் கை விட்டாலும் நான் விட மாட்டேன். தமிழ்நாட்டில் கிரிமினல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்றாலும், குட்கா விவகாரத்தில் நான் ஒய்வு பெற விட மாட்டேன். ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா.பா பாண்டியராஜன் அல்ல, அவர் ஒரு மாஃபியா பாண்டியராஜன். ஆவடியில் மா.பா பாண்டியராஜனை தோற்கடிக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். ஏழாயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, அதைதான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அரசுப் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டு, காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் மாஸ்க் போடுங்கள். இதனை உங்கள் அண்ணன், தம்பியாக கேட்டுக் கொள்கிறேன். மாஸ்க் கொடுப்பதில் அதிமுக ஆட்சி ஊழல் செய்துள்ளது. ஆவடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். திருவள்ளுர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்... புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பதில்!