திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கால்நடைகள் மருத்துவ முகாமை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடக்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறுகையில், "கிராமபுற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கால்நடைகளுக்கு பருவ மழை காலங்களில் வரும் நோயான தொண்டை அடைப்பான், கோமாரி உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருக்க கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கஜா புயல் என அனைத்து இயற்கை இடர்பாடுகளின் போதும் முதலமைச்சர் அனைவராலும் 'வெரி குட் முதலமைச்சர்' என பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டார். உரக்கடைகளில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
முதலமைச்சர் அதிக துறைகளை வைத்துள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், "அனைத்து துறைகளுக்கும் முதலமைச்சர் தான் தலைவர், பொதுப்பணித்துறை நீர் மேலாண்மையில் முதலமைச்சர் போன்று செயல்பட்டவர்கள் யாரேனும் உண்டா, என்று துரைமுருகனால் கூற முடியுமா" என்றார்.