திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளாட்சி நிர்வாக அலுவலர்களுக்கான கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு நோய் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, அருகேவுள்ள கோட்டை கரை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சரிடம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் 100 படுக்கைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ஊரடங்குக்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1,300ஆக இருந்தது. தற்போது ஊரடங்கிற்குப் பின்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900ஆக குறைந்துள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
கரோனா சிறப்பு மையத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகளுடன் கூடிய கர்பிணி பெண்களுக்கான சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தை பால்வளத் துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
அப்போது மருத்துவமனை வளாகத்தின் வெளியே திரண்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வார்டு கொண்டு வந்தால் கரோனா நோயாளிகள் பலரும் வந்து செல்வார்கள். எனவே இந்த கரோனா சிகிச்சை மையத்தை திறக்கக் கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களுடன்கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேச்சுவார்த்தை நடத்தி, 'இது கரோனா சிகிச்சைக்கான ஒட்டு மொத்த மையம் கிடையாது.
இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முதற்கட்ட சிகிச்சையளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்பு மையம் தான்' என விளக்கமளித்தார். இதனைப் புரிந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இதுவரை 3,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைத்துள்ளன - சென்னை மாநகராட்சி