திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து பால் பெறப்பட்டு வருகிறது. அதன்புடி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பாலை திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இங்கிருந்து காலையில் 500 லிட்டர் பாலும், மாலையில் 400 லிட்டர் பாலும் கேன்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. கிராமத்திலிருந்து பாலை கொண்டுச் செல்லும்போது தரமான பால் என்பதை ஆவின் ஊழியர்கள் அங்கேயே ஆய்வு செய்கின்றனர்.
ஆனால் காக்களூர் தொழிற்சாலையில் ஆய்வு செய்த பிறகு தரமற்ற பால் என வாரத்தில் 3 நாள்கள் திருப்பி அனுப்பிவிடப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் தும்பிக்குளம் கிராமத்தில் திருத்தணி - நாகலாபுரம் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிராமத்தில் ஆய்வு செய்யும் போது பாலின் தரம் 26 விழுக்காடு இருக்கும் சூழ்நிலையில், தொழிற்சாலையில் ஆய்வு செய்யும் போது 23 விழுக்காடு மட்டும் இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையதாக இல்லை. அலுவலர்கள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக தொண்டரைத் தாக்கிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை!