சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் சையது ஜாபர். இவர் குன்றத்தூரை அடுத்த திருமுடிவக்கம் சிப்காட் பகுதியில் சோபா உள்ளிட்ட பர்னிச்சர்கள் செய்யும் கம்பெனி நடத்தி வந்தார். இங்கு 10க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். கீழ்த்தளத்தில் வாகனங்களுக்கு பொறுத்தப்படும் பேரிங் தயாரிக்கும் கம்பெனியும், மேல் தளத்தில் சோபா தயாரிக்கும் கம்பெனியும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 12) பிற்பகல் ஊழியர்கள் சாப்பிடச் சென்றபோது திடீரென சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்ததும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த ஊழியர்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. இது தொடர்பாக, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
இதையும் படிங்க:
'விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி' விழிப்புணர்வு நிகழ்ச்சி