திருவள்ளூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக, அக்கட்சியில் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று (அக்டோபர் 18) திருவள்ளூர் சென்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசினார். அதில், “தமிழ்நாடு அரசு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வழக்குகளைப் போட்டுவருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்திவிட்டு தமிழ்நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.
மேலும் தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. ஆங்காங்கே புயல் வெள்ளம் வருகிறது. அதுபோன்ற இடங்களை ஆய்வுசெய்து, அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசு படுதோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை. ஆகையால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றார்.
மேலும் ஏர் இந்தியா தனியாருக்கு விற்பனை செய்வது கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது என்பது குறித்து கேட்டபோது, “ஒன்றிய மோடி அரசு இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் பலன் பின்னர்தான் தெரியவரும்” என்றார்.
இதையும் படிங்க: பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை - விஜயபாஸ்கர்