திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனிலிருந்து தேனி மாவட்டத்திற்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 30 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவை மினி பேருந்து மூலம் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஜி சிதம்பரம் கூறுகையில், தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு 20 இவிஎம் இயந்திரங்களும், 30 விவிபெட் இயந்திரங்களும் எதற்காக எடுத்துச் செல்கிறார்கள். ஏற்கனவே, ஈரோட்டிலிருந்து தேனிக்கு வாக்குப்பதவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், ஏன் இந்த இயந்திரங்களை எடுத்துச் செல்கிறார்கள் என அனைத்துக்கட்சிகளும் தேர்தல் அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில்தான் இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுகிறது என விளக்கம் கொடுக்கின்றனர்” என்றார்.