திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள தாமரைக்குளம் புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகைக்கடன், வட்டிக்கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்தக் கூட்டுறவு சங்க அலுவலகம் ஊரின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால், நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்த நபர் ஒருவர் அலுவலக கதவை உடைக்க முயற்சித்துள்ளார். அலுவலகத்தின் கதவுகள் இரும்புக் கம்பி கொண்டு செய்யப்பட்டிருந்ததால் அவரால் உடைக்க முடியவில்லை. எனவே அவர் சுவரை துளையிட்டு உள்ளே செல்ல முயற்சித்துள்ளார். இதுவும் தோல்வியடைவே அங்கிருந்து அவர் தப்பிச்சென்றுவிட்டார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கூட்டுறவு சங்க அலுவலர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். உடனே அங்கு விரைந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். அரசு சார்ந்த அலுவலக கட்டடத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிங்க: திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை: வெல்டிங் தொழிலாளி கைது