திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த, குறை தீர்ப்பு நாள் கூட்ட அரங்கிற்குள் வந்த அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிப்பதால் பின்னர் வாருங்கள் என்று கூறியும் அதை ஏற்காத அதிமுகவினர், நேரடியாக மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து கொண்டு மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமரிப்பு பணி ரூ.2.83 கோடியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அப்பணிகள் எவ்விதமான பாதுகாப்புமின்றி மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அதே வேளையில், கடந்த மூன்றாம் தேதி கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஈரடுக்கு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேம்பாலத்தின் மேல் பகுதியில் இருந்து பெரிய அளவிலான கல் இடிந்து அவர் மீது விழுந்தது. அதனால், பலத்த காயம் அடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மேல் சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை (மே 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது உறவினர்கள் நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. எனினும், முறையான பராமரிப்பு இல்லாததும், பாதுகாப்பு திட்டம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் தான் இந்த விபத்திற்கு காரணம். எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேல்முருகன் உயிரிழந்த நிலையில் அது தொடர்பாக காவல்துறை உரிய வழக்கு பதிவு செய்து ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் அதிமுகவினர் வலியுறுத்தினர்.
அதேபோன்று, வேல்முருகன் குடும்பத்திற்கு இழப்பீடாக அரசு 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். அப்படி முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுகவின் சார்பில் மாவட்ட நிர்வாகம் முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஏராளமான அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து கொண்டு மனு அளித்த சம்பவம், அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தூத்துக்குடி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!