தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் உள்ள 425 கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
அதன்படி, ராதாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட விஜயாபதி ஊராட்சியில், விஜயாபதி கீழ் ஊரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த பலதரப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என சிலர் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனை வாங்கிக் கொண்ட பற்றாளர் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.