திருநெல்வேலி: அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் வி.கே.புரம் ஆகிய காவல் நிலையங்களில், விசாரணைக் கைதிகளின் பல்லை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் கொடூரமாக பிடுங்கியதாக எழுந்த புகாரில், மூத்த அதிகாரி அமுதா ஐஏஎஸ், உயர்மட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற 2ஆம் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட 10 பேர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், நள்ளிரவு 12 மணி வரை விசாரணை நடைபெற்றது.
ஆனால், இவர்களில் 7 பேரிடம் மட்டுமே விசாரணை நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள வேத நாராயணன், எம்.மாரியப்பன் மற்றும் சுபாஷ் ஆகிய மூன்று பேரும், இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் விசாரனையில் அதிகாரி அமுதா ஐஏஎஸ் முன்பு ஆஜராகினர். இதில், முதலில் எம்.மாரியப்பன் விசாரணையை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.மாரியப்பன், “நானும், ஏஎஸ்பி (முன்னாள்) பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, அதிகாரியிடம் நடந்த விவரத்தைக் கூறி உள்ளேன். அவர் (அமுதா ஐஏஎஸ்) விரிவாக விளக்கம் கேட்டார். பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல்லை உடைக்கும்போது அவருக்கு உதவியாக இருந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்களின் வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து, அரசு சில விஷயங்களை மறைக்கப் பார்க்கிறது. பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கான விவரத்தை செய்தியாளர்களுக்கு வழங்க மறுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நபரில் ஒருவரின் பிறப்புறுப்பை, ஏஎஸ்பி வன்மையாக தாக்கி உள்ளார். எனவே, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட நபர்களின் பல்லை உடைக்க ஏஎஸ்பிக்கு உதவியாக இருந்த மற்ற காவலர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், தற்போது வரை ஏஎஸ்பி மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அவர்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை” எனக் கூறினார்.
முன்னதாக, எம்.மாரியப்பன் அம்பாசமுத்திரம் காவல் துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போதுதான் விசாரணைக்கு வந்த ஏஎஸ்பி பல்வீர் சிங், மாரியப்பனின் வாயில் சல்லிக்கற்களை போட்டு, கடிக்கச் சொல்லி அவரது பல்லை உடைத்ததாகவும் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம்:2ஆம் கட்ட விசாரணையில் மூன்று பேர் ஆஜர்