திருநெல்வேலி: அரசு.அமல்ராஜ் எழுதிய "ஓர்மைகள் மறக்குமோ" (மாஞ்சோலை வாழ்வியலும் வரலாறும்) என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று (அக்.1) நெல்லை பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். கவிஞர் விசாலி கண்ணதாசன், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூ மணி ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் வைகோ பேசுகையில், "தமிழக மக்களின் நினைவுகள் அசைபோடும் வகையில் பல்வேறு பாடல்களைத் தந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவரது மகள் இந்த நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் என்பது எளிமையான வழி இல்லை. கரடு முரடான துன்பம் சூழ்ந்த பாதையே அரசியல். அதில் எடுத்த முடிவில் உறுதியோடு பயணிப்பவர்களில் இந்த நூலின் ஆசிரியரும் ஒருவர்.
இந்திய விடுதலைக்கு முன்பு அடர்ந்த வனப் பகுதியாக திகழ்ந்த மாஞ்சோலை மக்களின் கடுமையான உழைப்பால் சிறந்த தேயிலை கேந்திரமாக உருவெடுத்தது. தமிழும், மலையாளமும் பேசும் மக்கள் வாழ்ந்தாலும், சாதி சமய பேதமற்ற சமத்துவம் நிறைந்த ஊராக திகழ்ந்து வருகிறது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி வாகனத்தை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை மறுப்பா? - ஈரோடு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை!
38 இருக்கைகள் மட்டுமே கொண்ட மிகச்சிறிய பேருந்தில் தினமும் முண்டியடித்துப் பயணித்து கல்வி முதல் தங்கள் அன்றாட தேவைகளை தீர்த்துக் கொள்ளும் கட்டாயத்தில் வாழ்பவர்கள் மாஞ்சோலை மக்கள். கடின உழைப்பை மட்டுமே நம்பி நீண்ட நெடிய ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமையான காய்கனி ,பழங்கள் பயிரிடுவதைத் தடுத்தமைக்கும், ஊதிய உயர்வுக்கு வழி தேடி போராட்டங்கள் நடத்தி சோதனைகளைச் சந்தித்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களது வாழ்வியலை பேசும் 'ஓர்மைகள் மறக்குமோ' நூல் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன்.
மலைவாழ் மக்களின் மகிழ்ச்சி, சோலைக்குள் இருக்கும் சோக கீதங்கள் என அனைத்தையும் நூலில் பதிவிட்டு இருப்பது சிறப்பானது” என்றார் .இந்த நூல் வெளியீட்டு விழாவில் மாஞ்சோலை, காக்காச்சி ,ஊத்து ,நாலுமூக்கு மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: Cauvery Water dispute: காவிரி விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் மவுனம் சாதிப்பது ஏன்? - விளாசும் நெட்டிசன்கள்!