திருநெல்வேலி: கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ஆதித்யன். இவர், திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ரவி ஆதித்யன் இன்று (மார்ச் 13) திடீரென காவல் சீருடையுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
திங்கள் கிழமை என்பதால் பொதுமக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொள்ள பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வருவது வழக்கம். அதில் சிலர் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காத மன விரக்தியில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவங்களும் நடைபெறும்.
எனவே திங்கள் கிழமை அன்று ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் சீருடை அணிந்த காவலரே கையில் மனுவுடன் வந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காவலர் ரவி ஆதித்யன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது மனைவி சில வேலைக்காகத் தென்காசி சென்றார். அங்கு அவரை காவல் உளவுத் துறையினர் எனது மனைவியை மறைமுகமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி தென்காசியில் உள்ள பாஜக கட்சியினரிடம் அடிபணிய வைத்துள்ளனர். பாஜக கட்சியினர் தென்காசி பகுதியில் இந்து - முஸ்லீம் பிரச்னை உருவாக்கி நாசகர வேலை செய்து அதில் ஆதாயம் தேட எனது மனைவியை வலுக்கட்டாயமாகக் கட்சியில் உறுப்பினராக்கி உள்ளனர்.
மனைவியுடன் எனது குழந்தைகளையும் சேர்த்து வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். இது தொடர்பாகக் காவல் துறையிடம் பலமுறை புகார் அளித்து விட்டேன். ஆனால், தற்போது வரை காவல் துறையினர் எனது மனைவி மற்றும் குழந்தைகளை இன்று வரை என்னுடன் பேசவிடாமல் பார்க்க விடாமல் தடுத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு தென்காசி இலஞ்சியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக எனது மனைவி மற்றும் குழந்தைகளை அடைத்து வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தும் காவல் துறையினர் வேண்டுமென்றே தாமதமாக வந்தனர். அவர்கள் எனது மனைவியை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். பாஜக கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் அங்கு வந்த பிறகு எனது மனைவியும் குழந்தையும் வெளியே வர வைத்து அவர்களுடன் பேச வைத்தனர். ஆனால், என் மனைவியை என்னுடன் அனுப்பாமல் மீண்டும் பாஜக கும்பலிடம் அனுப்பி வைத்து விட்டனர்.எனவே என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மூன்று பேருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்க கோரி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன்” என்று தெரிவித்தார்.
மனைவியை கடத்தி வைத்து சதி வேலை செய்து வருவதாக காவல் துறை மீதும் பாஜக கட்சி மீதும் சீருடையில் இருந்த காவலர் குற்றம் சுமத்திய சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சாதாரண காவலரின் மனைவியை தேசிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடத்தி வைத்திருப்பதாக கூறுவதில் சரியான லாஜிக் இல்லாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இதே காவலர் ரவி ஆதித்யன் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆடியோவில் தனது மனைவியின் வங்கி கணக்கு எண்ணை சில காவல் அதிகாரிகள் சட்டவிராத பண பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் ஐஜி வரை இதில் தொடர்பு இருப்பதாகவும் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ஆனால் தற்போது தனது மனைவியை கடத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதனால் காவலரின் புகாரில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து திருநெல்வேலியில் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “கடந்த 8 மற்றும் 9 ஆம் தேதி காவலர் ரவி ஆதித்யன் விடுமுறை எடுத்திருந்தார். அதன் பிறகு தற்போது வரை அவர் பணியில் சேரவில்லை. அவரது மனைவியை அழைத்து கேட்டபோது, அவர் ரவி ஆதித்யனுடன் வாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
எனவே இனிமேல் அவர் நீதிமன்றம் மூலம் தான் தனது பிரச்னையை பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக காவலர் ரவி ஆதித்யனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுத்தோம். தற்போது சீருடையுடன் அவர் மனு அளித்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், இதன் மூலம் காவலரின் மனைவி கடத்தப்படவில்லை என்பதும் குடும்ப பிரச்னை காரணமாகவே அவர் தனது கணவரை பிரிந்து வாழ்வதும் உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்பு.. வட மாநில தொழிலாளர்கள் மீது புகார்.. நாமக்கல் போலீசார் விசாரணை!