திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கடந்த வாரம் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமை மக்கள் உரிய முறையில் பயன்படுத்திய நிலையில், இன்று(செப்.19) மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்தவாரம் ஞாயிறு அன்று சுமார் 29 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இன்றைய தினம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர். இன்று புதிய சாதனையாக தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 4 கோடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் இன்று 22 ஆயிரம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த இலக்கு வைக்கப்பட்டு, மாநகரில் 10 மையங்கள், புறநகரில் 200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில், 22,000 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு இருந்ததால், அனைத்து மையங்களுக்கும் 100 தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு முகாம்களில் காலை 11 மணிக்கெல்லாம் தடுப்பூசி தீர்ந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் கடைசி நேரத்தில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இந்தமுறையும் அதேபோல் சூழல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 7 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 75 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
கோவை தடுப்பூசி முகாம்
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், சுமார் ஒரு லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிலையில், இன்று வ.உ.சி மைதானம் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
706 இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இன்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் கோவை முதலிடம்