நெல்லை: பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த மங்கம்மாள் சாலையில் வசிப்பவர் அண்ணாமலை (47) தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் அரசம்மாள் (70). அண்ணாமலைக்குத் திருமணம் முடிந்த நிலையில் அரசம்மாள் மகனின் வீட்டிலேயே தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மூதாட்டி அரசம்மாள் வீட்டின் அருகே தீயில் கருகி நிலையில் உயிரிழந்தார். இது குறித்து நெல்லை தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அண்ணாமலையிடம் விசாரித்தபோது குடும்ப பிரச்சனையில் தனது தாய் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் தொடர்ந்து போலீசார் அவரிடம் மேலும் விசாரித்த போது, அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கண்டிப்பான விதத்தில் விசாரித்த போது மூதாட்டி அரசம்மாளை மகன் அண்ணாமலை மற்றும் மருமகள் அனிதா இருவரும் சேர்ந்து தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
குடும்ப பிரச்சனை மற்றும் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணாமலையின் மனைவி அனிதா, அரசம்மாளை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது போது கணவருடன் சேர்ந்து மாமியாரைத் தீர்த்துக் கட்ட அனிதா முடிவெடுத்துள்ளார்.
இருவரும் திட்டமிட்டபடி வீட்டில் கிடந்த விறகில் தீ வைத்து வயதான மூதாட்டியான அரசம்மாளை தீக்குள் தள்ளி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தாலுகா காவல்துறையினர் இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா இருவரையும் கைது செய்தனர்.
குடும்பப் பிரச்சனையில் பெற்ற தாயை மகனே தனது மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் கைத்துப்பாக்கியுடன் வலம் வந்த இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை