திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (செப். 13) மொத்தம் 17 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் மொத்தம் 20 மையங்களில் 7,460 மாணவர்கள் தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வுக்கு காலை 10 மணி முதலே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி மாணவிகள் கழுத்தில் செயின் அணியக் கூடாது, காதில் கம்மல் அணியக் கூடாது, பேனா எடுத்துச் செல்லக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவசரத்தில் செயின், கம்மல் அணிந்து வந்த மாணவிகள் தேர்வு மைய வாசல் முன்பு வைத்து அவற்றை கழற்றி தங்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ஜான்ஸ் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த திருமணமான மாணவி ஒருவர் தனது தாலி செயின், மெட்டியை கழற்றிய சம்பவம் அறங்கேறியுள்ளது.
இந்த மாணவி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த முத்துலட்சுமி. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மற்றொரு பட்டப்படிப்பு முடித்த நிலையில் மருத்துவ படிப்பு மீது உள்ள ஆர்வத்தால் முத்துலட்சுமி நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளார். இவருக்கு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதை அடுத்து தனது கணவர், உறவினர்கள் உடன் தேர்வு மையத்துக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் உடம்பில் எவ்வித ஆபரணங்களும் இருக்கக் கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது தாலிச் செயின், மெட்டியை கழற்றி தனது கணவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். இதன் காரணமாக தேர்வு மையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... ”தற்கொலை தீர்வல்ல!” - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா