திருநெல்வேலி: தமிழ்நாட்டில் அதிக கொலைகள் நடைபெறும் மாவட்டங்களின் பட்டியலில் திருநெல்வேலி மாவட்டம் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இன்றளவும் சாதிய ரீதியான பல கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 9ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரை, சக மாணவர்கள் மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த மாணவனின் தங்கை தடுக்க சென்றபோது அவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதுமட்டும் இன்றி மாணவனின் தாயையும் மூன்று பேரும் காலால் எட்டி உதைத்துத் தள்ளி உள்ளனர்.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அடுத்தடுத்து நடைபெறும் கொலைச் சம்பவங்களால் திருநெல்வேலி பதற்றமாகி காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மொத்தம் 11 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜா மணி கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, இசக்கி ஆகிய இரண்டு நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ராஜா மணி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் திமுகவைச் சேர்ந்த ராஜா மணி கீழ நத்தம் பஞ்சாயத்தில் உறுப்பினராகவும் உள்ளார். எனவே இந்த கொலைக்குப் பின்னணியிலும் சாதி மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராஜா மணி தரப்பிடம் கேட்டபோது, "எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், வளர்ச்சி அடைவது பிற சமூகத்தைச் சேர்ந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே எங்கள் மீது அவர்கள் ஒருவித வெறியோடு இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே ராஜா மணி கொல்லப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே சாதிய வன்மத்தால் பள்ளி மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் குறையாத நிலையில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனையில் பஞ்சாயத்து கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி மாவட்ட மக்களின் மத்தியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ராஜா மணியின் கொலைக்கு நீதி கேட்டு அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராடி வருகின்றனர். அடுத்தடுத்து அரங்கேறும் இந்த குற்றச் செயலால் மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதற்கிடையில், தொடர் கொலை சம்பவத்தைத் தடுப்பதற்காக மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை சார்பில் ஸ்ட்ரிமிங் ஆபரேஷன் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை கையாண்டு வருகின்றனர். இதன் மூலம் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் மட்டும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சாட்டிங்கில் சீட்டிங் : பெண்கள் பெயரில் போலி சாட் செய்த இளைஞர் கைது..!