திருநெல்வேலி: நெல்லை மாநகரப் பகுதியிலுள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாநகர காவல்துறை சார்பாக அந்தப் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, நிகழ்ச்சி முடிவில் தனியாக வந்த ஐந்து மாணவிகள் அங்குள்ள காவல் துறை உயர் அதிகாரியிடம் அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் ஜோசப் செல்வின் என்பவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு தருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளின் இந்த புகாரைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் ஜோசப் செல்வினிடம் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் மாணவர்கள் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் ஆசிரியர் ஜோசப் செல்வின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஜோசப் செல்வினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மாணவியரை பாலியல் தொல்லை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறை சார்பாக நடத்தப்படும் போக்சோ குறித்த வழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதனால் அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலி அருகே தீண்டாமை கொடுமை.. ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது!