திருநெல்வேலி: விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 18 ஆம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விஜர்சனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி, ரசாயன கலப்பு கொண்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு கூடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் செய்த, விநாயகர் சிலைகளில் ரசாயன கலப்பு இருப்பதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
ஆகையால் அங்கு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த 3 தினங்களாக இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஏற்கனவே பணம் செலுத்தி தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வடமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்தும் ஆண்டு ஆண்டாக கொண்டாடப்படும் விழாவை, இந்த உத்தரவு தடை செய்வது போல் உள்ளது என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பசுமை தீர்ப்பாய உத்தரவை மேற்கோள்காட்டி நெல்லை பாளையங்கோட்டையில் வட மாநில தொழிலாளர்கள் செய்த விநாயகர் சிலைகள் இருக்கும் இடத்தை இரும்புத் தகடுகள் கொண்டு பூட்டி வருவாய்த் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவர்கள் வெளியே சென்று வருவதற்கு மட்டும் ஏதுவாக, ஒரு சிறிய வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதைக் கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு ஆண்டு விநாயகர் சிலைகளை வைக்கத் தவறினால், அந்தப் பகுதிக்கான சிலை வைக்கும் அனுமதி காவல் துறையினரால் ரத்து செய்யப்படுவது வழக்கம். ஆகையால், வழக்கமாக வைக்கக் கூடிய பகுதிகளில் எப்படியாவது விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்ற முனைப்போடு பல்வேறு முயற்சிகளை இந்து அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.