திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 22ஆம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் நாங்குநேரி வாகைக்குளத்தைச் சேர்ந்த விசாரணைக் கைதியான முத்துமனோ அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து பெருமாள்புரம் காவல் துறையினர் 7 பேரை கைது செய்து 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை சிறைச்சாலையில் துணை ஜெயிலர், உதவி ஜெயிலர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முத்துமனோவின் உறவினர்கள் இன்றுடன் 12ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து வாகைக்குளத்தில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இவர்கள் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், முத்து மனோவின் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சேரன்மகாதேவி கோட்டாட்சியர் பிரதிக் தயாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வாகைக்குளத்திற்கு நேரடியாக சென்று போராட்டக்காரர்களிடம் உடலை வாங்கிக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர் .
அதற்கு உறவினர்கள் சிறைத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து உறவினர்கள் நாளை (மே.5) அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை ஏற்கனவே சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கைதி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு!