திருநெல்வேலி: தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநர்களில் ஒருவர் நெல்சன். இவர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
மேலும், உலகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில், ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், காலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் வர ஆரம்பித்தனர். நெல்லையில் மட்டும் ஐந்து திரையரங்குகளில் ஜெயிலர் படமானது வெளியாகியுள்ளது.
மேலும், திரையரங்க வளாகத்தில், பிரமாண்டமாக பேனர் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும், ஜெயிலர் படத்தை ரசிகர்கள் உற்சாகமோடு வரவேற்றனர். மேலும், கொண்டாட்டத்தில் அசாம்பாவிதங்களை தவிர்க்க, அனைத்து திரையரங்குகளிலும், மாநகர காவல் துறை சார்பில், பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள “ராம் முத்துராம்” திரையரங்கின் வளாகத்தில் நடிகர் ரஜினிக்கு பேனர் வைத்து ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது அங்கு வந்த சந்திப்பு காவல்துறையினர், பால் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை எனவும், எனவே பேனரில் பாலை ஏற்ற வேண்டாம் என்று எச்சரித்தனர்.
இதனால் ரஜினி ரசிகர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், காவல்துறையினர் பொது மக்களுக்கு இடையூறாக எந்த செயலும் செய்யக்கூடாது எனவும், திரையரங்கத்தின் உள்ளே கொண்டாடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆய்வாளர் கூறுகையில், “தேவையில்லாமல் வாழ்க்கையை சீரழித்து கொள்ளாதீர்கள்”, வீடியோ எடுத்து கொண்டிருக்கிறோம் என்று மிரட்டலாக தெரிவித்தார்.
இதனால் ரசிகர்கள் பின் வாங்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இனி தியேட்டருக்கே வரமாட்டோம் என ரஜினி ரசிகர்கள் கையெடுத்து கும்பிட்டு விடை பெற்றனர்.பின்னர், அனைவரும் அமைதியாக படம் பார்க்க சென்றனர். இதற்கிடையில் பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் இரண்டு பேரை சந்திப்பு காவல்துறையினர், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் நடிகர்களின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வது வாடிக்கையாக நடைபெறுகிறது. மேலும், ஜெயிலர் திரைப்படம் வெளியாவதைத் தொடர்ந்து பால் அபிஷேகம் செய்ய சந்திப்பு போலீசார் தடை விதித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க:Jailer release: வெளியானது ஜெயிலர் திரைப்படம்: திருவிழாக் கோலம் பூண்ட திரையரங்குகள்.!